சென்னை:
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சனைகளில் முதல்வர் ஜோசப் விஜய் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘காவிரி நீர் உரிமையும்… தமிழகத்தின் வாழ்வுரிமையும்!’ எனும் தலைப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் உண்மைக்கு முரணானதாகும். காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் விஜய் கடந்த மே 5ஆம் தேதியன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகள், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து கடந்த ஜூன் 19ஆம் தேதியன்று பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பினார். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டங்களில் தமிழ்நாடு நீர்வளத்துறை தொடர்ந்து நமது உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதற்கு முன்பு முதலமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மற்றும் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான், காவிரி நநி நீர் பிரச்சினையும், மேகதாது அணை விவகாரமும் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது. காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமையாகும்.
#AadhavArjuna #MkStalin #Mekedatu #CauveryWater #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #VijayGovernment #DeltaFarmers #CauveryIssue #PoliticalNews #TamilNewsLive