மாலைத்தீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீத், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனின் விவகாரத்தில் உதவி வழங்க முன்வந்துள்ளார்.
அனோஜனின் வழக்கில் சாத்தியமான மனிதநேயத் தலையீடுகள் குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் அவரைச் சந்தித்தபோதே நஷீத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, அனோஜனின் நடத்தை “கண்டிக்கத்தக்கது” எனக் கருதிய போதிலும், மனிதநேய அடிப்படையில் அந்த இலங்கைப் பிரஜைக்கு உதவத் தயாராக இருப்பதாக நஷீத் இரண்டு சட்டத்தரணிகளிடமும் தெரிவித்தார்.
சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் அனோஜனின் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நிவாரணம் தேடுவதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை இலங்கை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.