பெற்றோல் விலை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பானது எமது சேவைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் சேவை செய்வதற்கு எரிபொருள் இல்லை, மறுபுறம் அரசாங்கம் விலைகளை அதிகரித்துள்ளது. இது ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது’ போன்ற நிலையாகும்.
எனவே, முச்சக்கர வண்டிக் கட்டணத்தின் முதல் கிலோமீற்றருக்கான தொகையை 20 ரூபாவினால் அதிகரிக்க நாம் முன்மொழிகிறோம். இதனை மீற்றர் பயன்படுத்தும் சாரதிகள் மாத்திரமே நடைமுறைப்படுத்த முடியும்.
தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக நாம் விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லவுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.