பேராதனை பல்கலைக்கழகத்தின் மகா மாணவர் சங்கத்தினால் நேற்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் ஒரு ஒழுங்கையை பொலிஸார் மூடியதால் அவ்விடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
“தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை ‘பாலர் பாடசாலைகளாக’ கருதி சட்டங்களை உருவாக்கி, சுற்று நிருபங்களை வெளியிட்டு மாணவர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயல்கின்றனர். இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்” என மாணவர் தலைவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
மேலும், மாணவர்களின் எழுச்சியையும் ஒற்றுமையையும் தடுப்பதற்காகவே இவ்வாறான சுற்று நிருபங்கள் மூலம் மாணவர் அடக்குமுறை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.