தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நடத்த விரும்பவில்லை என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஜனநாயகமும் இறைமையும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளன என்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
மிகநீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்கள் அரசாங்கத்திற்கு அக்கறையற்ற விடயமாக மாறிவிடக்கூடும்.
ஜேவியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தனது முன்னவரான லயனல் போபகேயிடம் தனது கட்சி மாகாணசபைகளையோ இந்திய இலங்கை உடன்படிக்கையையோ விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
லயனல் போபகே குறைந்தபட்சம் ரில்வின் சில்வாவின் கருத்தினை நிலைப்பாட்டினை சமூக ஊடகங்களிலாவது வெளியிடும் அளவிற்கு நேர்மையானவராக நல்லவராகயிருந்துள்ளார்.
மாகாணசபைதேர்தல்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவிற்கு எந்த காலக்கெடுவும் வழங்கப்படவில்லை.இதன் அர்த்தம் என்னவென்றால் மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் நடத்தாமலே விடலாம் என்பதாகும்.
அரசாங்கத்தின் இடைநிலை கீழ் ஆட்சி கட்டமைப்புகளை தெரிவு செய்வதற்கான மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒட்டுமொத்த தேர்தல்முறையை ஆராய்வதற்காக மற்றுமொரு குழுவை நியமித்துள்ளனர்.இதுவும் ஒட்டுமொத்த மக்களின் வாக்குரிமை பறிப்பாக மாறக்கூடும்.
இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும்,தேசத்தின் நலனுக்காக கைகோர்க்ககூடிய கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதே கருத்தினை பகிர்ந்துகொண்டுள்ள சட்டத்தரணி சிரான் லக்திலக குறிப்பிடுகையில்
சட்டத்தின் ஆட்சி ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது,சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என ஜனாதிபதி வாக்குறுதியளித்த போதிலும் சட்டத்தின் ஆட்சி அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
மோசமான மனிதர்களின் ஈவிரக்கமற்ற தன்மையை விட நல்ல மனிதர்களின் மௌனம் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.