யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அமைத்து உல்லாசமாக இருக்கும் நிலையில், காணிகளுக்குரிய மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மயிலிட்டி மக்களால் காணிவிடுவிப்பை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் வாழ்ந்த மக்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அன்றிலிருந்து இதுவரை அந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கு எந்த அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த மக்கள் ஏறத்தாள 3,500 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீகக் காணிகளை இழந்துள்ளனர்.
அண்மையில் அனுராதபுரத்தில் நடந்த ‘ஹிரிகம’ நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிங்கள மக்களிடம் “நிலம் என்பது உங்களுடைய உரிமை, உங்களுடைய சொத்து” என்று கூறியதை சுட்டிக்காட்டி, அதே உரிமையை தமிழ் மக்களுக்கும் வழங்குமாறு உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.
அந்தப் பகுதியில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது வந்து தங்கிவிட்டுச் செல்வதற்காகவே அது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் உள்ளன. அந்த மக்கள் வீதிகளில் போராடிக்கொண்டிருக்க, இராணுவத்தினர் அவர்களது பூர்வீக நிலங்களை அலங்கரித்து பங்களா அமைத்து சுகபோகம் காண்கின்றனர் என்று ரவிகரன் கண்டித்தார்.
முல்லைத்தீவு, மன்னார் உட்பட வேறு பல இடங்களிலும் இதேபோன்ற நிலை நீடிப்பதாகவும், தற்போதைய ஆட்சியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்