இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே அடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டே அந்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
பக்கச்சார்பற்ற மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகள் மற்றும் ஏனைய கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பயனுள்ள முறையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதை உறுதி செய்ய நாட்டின் அரசாங்கங்கள் தவறியுள்ளன என்பதை குறித்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்ட 32 பேர், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்கள், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் ஏனைய மூலங்களை விரிவாக மதிப்பாய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1987-1989 காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி (JVP) கிளர்ச்சி மற்றும் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது அரசாங்க பாதுகாப்புப் படைகள் மற்றும் அரச சார்பற்ற ஆயுதக் குழுக்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டு, கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 களில் இருந்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் 10 க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், நாட்டின் கடந்த கால குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவது தோல்வியடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 580 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது, கடந்த காலத்தில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான சுயாதீன விசாரணையின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.
இவ்வறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, செம்மணி மனிதப் புதைகுழியானது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மனிதப் புதைகுழி தொடர்பான உள்நாட்டு விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் வெளியிடுகின்றனர்.
மேலும், 2006 ஆம் ஆண்டு மூதூரில் ‘எக்ஷன் அகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ (Action Against Hunger) தொண்டு நிறுவனத்தின் 17 தன்னார்வ ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் கீத் நொயார் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சில முக்கிய சம்பவங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சிறிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
இருப்பினும், பல சம்பவங்கள் தொடர்பில் இறுதியான சட்டப்பூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பக அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
பெரும்பாலான சம்பவங்கள் தொடர்பில் இன்னமும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை என்றும், அச்சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் வழக்குகளாக மாறவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.