மத்திய கிழக்கு போர் பதற்றம் தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எரிசக்தி, சுற்றுலாத்துறை, வர்த்தகம், அந்நிய செலாவணி போன்ற துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கு போர் பதற்றம் எவ்வாறான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்த நிச்சயமற்றதன்மை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ரூபாவின் பெறுமதி ஒப்பீட்டளவில் ஸ்திரமான நிலையில் காணப்பட்டாலும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளில் போன்றே இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் தளம்பல் நிலை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே மத்திய கிழக்கில் போர் பதற்ற நிலைமை நீண்ட காலத்திற்கு நீடித்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய வங்கியின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.