மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் வாபஸ் பெற்றுக்காண்டதனால் அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் பத்திரிகை வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதனால் பிரதிவாதிகள் குற்றமற்றவர்களாக அறிவித்து விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி மொஹம்மத் மிஹால் இன்று (10) உத்தரவிட்டார்.
2011 ஆம் ஆண்டு கிரேக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த போதும், அதனை அறிந்திருந்தும் அந்நாட்டின் அரசாங்கம் வெளியிட்ட பிணைமுறி பத்திரங்களை வாங்கி, இலங்கை அரசுக்கு 184 கோடி ருபாவிற்கும் மேற்பட்ட இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அந்த பத்திர பரிவர்த்தனை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கும், நிதி அறிக்கை ஒழுங்குமுறைகளுக்கும் அமையச் சட்டபூர்வமாகவே இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் முன்பு தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு இரண்டாவது முறையாகவும் இவ்வழக்கை தொடர்ந்தது நீதியற்றதாகும் என ஜனாதிபதி சட்டத்தரணிகள் திலான் ரத்னாயக்க மற்றும் நலின் லது ஹெட்டியாரச்ச்சி எழுத்துமூலம் தெரிவித்திருந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, அத்தாட்சி ஆணைக்குழு குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றதையடுத்து, குறித்த நால்வரும் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.