அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் நடத்தப்பட்டது.
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினர், ஜனாதிபதி, நீதி அமைச்சர், சட்ட மாஅதிபர், மகளிர் விவகார அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக மகஜரை கையளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்கக்கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் கோரிக்கை முன்வைத்தார்.
இன்று புதன்கிழமை (27) அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது.
ஆனால் அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறோம்.
சட்டம் அனைவருக்கும் சமமானது மாதத்தின் பெயரால் சட்டத்தை மலினப்படுத்துவதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ யாரும் முயற்சிக்கக் கூடாது.
தெற்கை பொருத்தவரையில் இந்த சிறுமியின் விவகாரத்தை திசை திருப்பவும் பௌத்த துறவி சம்பந்தப்பட்டதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் குரல் கொடுக்க முன்வராமை கவலையளிக்கிறது.
இலங்கையில் சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடூரமான அநீதியாக இந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் பார்க்கின்ற நிலையில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.