நாட்டின் பெறுமதிமிக்க புராதன தொல்பொருட்கள் மற்றும் புதையல் திருட்டுகள் தொடர்பில் அரசியல் தலைமைத்துவத்தில் இருந்த இரு பிரதான குடும்பங்களான ‘பிரேமதாச’ மற்றும் ‘ராஜபக்ஷ ‘ பெயர்களே அதிகம் குறிப்பிடப்படுகின்றன என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அண்மையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தேன் அங்கு பரவலாகப் புதையல் தோண்டப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இன்றி இவ்வாறான பாரிய குற்றங்கள் தன்னிச்சையாக நடக்க வாய்ப்பில்லை.
அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் புதையல் தோண்டும் இந்த மோசமான கலாசாரம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஆரம்பமானது. கடந்த காலங்களில் உயர் பொலிஸ் அதிகாரிகள் கூட இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாட்டின் பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மற்றும் புதையல் திருட்டுகள் தொடர்பில் பேசும்போது, இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தில் இருந்த இரு பிரதான குடும்பங்களின் பெயர்கள் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றன.அதற்கமைய, ‘பிரேமதாச’ மற்றும் ‘ராஜபக்ச’ ஆகிய இரு குடும்பங்களின் பெயர்களே அவை.
இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான தொல்பொருள் விவகாரங்களில் இருந்து அரசியல் தலையீடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தேசிய சொத்துக்களைப் பாதுகாத்து மக்களின் உரிமைகளை மக்களிடமே ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.