பிராம்டன், ஒன்டாரியோ பகுதிகளில் பகல் நேர வெப்பநிலைகள் உயரத் தொடங்கியுள்ளதால், உருகும் பனி மற்றும் ஆற்றில் உள்ள பனிக்கட்டிகள் மழையுடன் சேர்ந்து உள்ளூர் பகுதிகளில் வெள்ள அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என பிராம்டன் நகர சபை செய்தி வெளியிட்டுள்ளது. பனிக்கட்டிகள் ஒன்று சேர்ந்து நீரின் ஓட்டத்தைத் தடுக்கலாம் எனவும் இதனால் ஆறுகள், ஓடைகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளின் அருகில் நீர்மட்டம் உயரலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பிராம்டன் நகர சபையானது நகரம் முழுவதும் நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மேற்படி கண்காணிப்புக் குழுக்கள் மழைநீர் வடிகால்கள், வெளியேற்ற வாயில்கள் மற்றும் நீர் நுழைவு பகுதிகளை சுத்தம் செய்து பரிசோதிக்கின்றன. மேலும் பூங்காக்கள் மற்றும் நீர்வழிகளின் அருகிலுள்ள பொழுதுபோக்கு பாதைகளில் நீர்மட்டத்தையும் நிலைமைகளையும் கண்காணித்து குடியிருப்போரையும் பூங்கா பயனாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
பனி உருகும் போது 72 மணி நேரம் வரை நீர் தேங்கியிருந்தாலோ அல்லது அதற்கும் மேலாக நீர் விலகாதிருந்தாலோ குடியிருப்போர் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதைவிட வானிலை தளம்பல் காரணமாக பீல் பிராந்திய சழிவகற்றல் மற்றும் கழிவு சேகரிப்பு சேவைகளிலும் மறுசுழற்சி சேகரிப்பு சேவையிலும் தாமதங்கள் ஏற்படலாம் எனவும் பிராம்டன் நகராட்சியானது மேலும் தெரிவித்திருக்கின்றது.