கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
சமிந்த விஜேசிரி எம். பி தமது கேள்வியின் போது,
நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்ட உத்தியோக பூர்வ வாகனங்களில் எண்ணிக்கை எத்தனை?
அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையடுத்து மேற்படி வாகனங்களில் ஜனாதிபதி செயலகத்திற்கு மீள ஒப்படைக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை எத்தனை என்றார்.
பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
ஜனாதிபதி செயலகத்தில் 833 வாகனங்கள் உபயோகத்தில் இருந்ததுடன் எமது அரசாங்கம் அவற்றில் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை குறைத்துள்ள நிலையில் தற்போது 634 வாகனங்களே உபயோகப்படுத்தப்படுகின்றன.அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி இவ்வாறு வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகம் உட்பட அனைத்து அமைச்சுக்களினதும் வாகனங்களை குறைப்பதாகவே நாம் பொது மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். அதன்படியே குறைத்துள்ளோம் என்றார்.