இளைஞர் ஒருவருடன் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை (sexual assault) சம்பவம் குறித்து, மார்க்கம் (Markham) நகரத்தைச் சேர்ந்த 61 வயது உளவியலாளர் (psychologist) ஒருவர் மீது யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) குற்றம் சுமத்தியுள்ளனர்.
மார்க்கம் நகரின் ஜான் ஸ்ட்ரீட் (John Street) மற்றும் பேவியூ அவென்யூ (Bayview Avenue) அருகிலுள்ள கிளினிக் ஒன்றில், கடந்த ஜூன் 29 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு மருத்துவ ஆலோசனையின் (appointment) போது இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆலோசனையின் போது, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மசாஜ் (massage) செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் முறையற்ற வகையில் தொடப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவருக்கு உடல் ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த ஜூலை 4 அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வாரண்ட் நடவடிக்கையைத் தொடர்ந்து, மார்க்கம் நகரைச் சேர்ந்த 61 வயதான ஃபரோக் செடிக்-டெய்லாமி (Farrokh Sedigh-Deilami) என்பவர் கைது செய்யப்பட்டு, பின்வரும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன:
-
பாலியல் வன்கொடுமை (Sexual Assault)
-
சிறார்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் (Sexual Interference)
இவரால் பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்கள் இருக்கக்கூடும் என தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் முன்வருமாறு ஊக்குவித்துள்ளனர்.
தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் யோர்க் பிராந்திய பொலிஸாரின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவை (Special Victims Unit) 1-866-876-5423 (ext. 7071) என்ற இலக்கத்திலோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பை 1-800-222-TIPS (8477) என்ற இலக்கத்தின் ஊடாக அநாமதேயமாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளும் விபரங்களும் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாகவே கருதப்படுவார்.