மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட தேடப்படும் நபர்களின் அடையாளம், இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச சட்ட அமலாக்க வழிமுறைகளை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.
சந்தேகநபர் ஒருவர் இருக்கும் நாடு அல்லது முகவரி தொடர்பில் தகவல்கள் அறியப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் திரட்டுவதற்காகவே இந்த நீல நிற அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும், எவ்வித அரசியல் தராதரமும் பாராது குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.