நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில் நிகழ்ந்த மரணங்கள் மற்றும் காயங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 19(1) இன் கீழ் அவசர ஒத்திவைப்பு வேளை விவாதம் (Adjournment Debate) ஒன்றைக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
கையெழுத்திடப்பட்டு இன்று (07 ஜூலை 2026) சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், கடந்த 2020 நவம்பர் 30 ஆம் திகதியிட்ட நாடாளுமன்ற விவாத அறிக்கை (Hansard Report) ஒன்றை எதிர்க்கட்சி எம்பிக்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். அதற்கமைய, சிறைக்காவலில் அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பயங்கர மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வாதாடியுள்ள எதிர்க்கட்சியினர், இது குறித்து நாடாளுமன்றத்தின் அவசர கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
“இதற்கமைய, இந்த விடயத்தின் பாரதூரமான தன்மையையும் அவசர தேவையையும் கருத்திற்கொண்டு, நாடாளுமன்றத்தின் அவசர கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, நிலையியற் கட்டளையின் 19(1) இன் கீழ் அவசர ஒத்திவைப்பு வேளை விவாதத்திற்கு உடனடியாக வாய்ப்பளிக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.