சென்னை:
நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய தமிழக மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், முறைகேடு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த சுமார் 20 மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
30 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தத் தொடர் போராட்டத்தில் மாணவர்களும் கலந்துகொண்ட நிலையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் எதிரொலியாக, டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்திலும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம், தி.நகர் பாலன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்ட நெருக்கடியை அடுத்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து டெல்லியில் மாணவர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்தச் சூழலில், நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழகத்தில் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், முதலமைச்சரின் உத்தரவின்படி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
#NeetProtest #MinisterRajmohan #TNGovt #StudentsProtest #BmNews #TamilNews #BreakingNewsTN #NeetExamIssue #TamilNaduPolitics #PoliticalUpdate #TamilNewsLive