சென்னை:
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட 5 நாள் விலக்குக் கேட்டுத் தான் கடிதம் எழுதியிருந்ததாகவும், வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க இருந்ததாலேயே அவகாசம் கேட்டிருந்ததாகவும் விளக்கமளித்தார்.
“அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஏற்கனவே சிறையைப் பார்த்தவன், எதற்கும் பயந்து ஓட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை\” என்று செந்தில் பாலாஜி அதிரடியாகக் கூறினார். தவெக அரசு எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனைச் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அவை அனைத்தும் பொய்யானவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் அவர் சவால் விடுத்தார். தவெக அரசு அமைந்ததிலிருந்தே தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பொய் வழக்கு போடுவது, கைது செய்வது, தொடர்பில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது போன்ற செயல்களில் மட்டுமே தவெக அரசு ஈடுபட்டு வருவதாக அவர் விமர்சித்தார். காவிரி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை என்றும், மின்கட்டணம் உயர்ந்தது தொடர்பாக உரியப் பதில் ஏதும் சொல்லாமல் அமைச்சர் நிர்மல்குமார் வழக்கம் போல் திசை திருப்புவதாகவும் செந்தில் பாலாஜி கடுமையாகச் சாடியுள்ளார்.
#SenthilBalaji #TVKGovt #HorseTradingCase #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #DMK #CMVijay #PoliticalUpdate #TamilNewsLive