அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களில் முதல் ஒன்றை விரைவில் பெற்றுக்கொள்ளும் நிலையில், கனடிய ஆயுதப்படைகள் திங்கட்கிழமை டெக்சாஸில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளன. இருப்பினும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எத்தனை போர் விமானங்களை இறுதியாக வாங்கப்போகிறது என்பதை ஓட்டாவா இன்னும் அறிவிக்கவில்லை.
கனடா–அமெரிக்கா இடையிலான தொடர்ச்சியான வர்த்தக மற்றும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக CF-18 போர் விமானங்களை மாற்றும் திட்டத்தின் எதிர்காலம் தற்போது மீளாய்வு செய்யப்படுகிறது.
சமீபத்திய எச்சரிக்கையாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவில் தயாரிக்கப்படும் விமானங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை திரும்பப் பெறவும், வரி விதிக்கவும் மிரட்டினார். மேலும், ஓட்டாவா “சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால்” கனடாவின் அனைத்து இறக்குமதிகளுக்கும் 100 சதவீத சுங்கவரி விதிப்பதாகவும் அவர் சமீபத்தில் எச்சரித்தார்.
திங்கட்கிழமை நடைபெறும் விழா, கனடாவின் முதல் F-35 விமானம் டெக்சாஸின் ஃபோர்ட் வர்த் நகரில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் உற்பத்தி வரிசையில் இறுதிக் கட்ட தொகுப்பில் இருப்பதை வெளிப்படுத்தும்.
கருப்பு பேனை பயன்படுத்தி, ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் (RCAF) தளபதி லெப். ஜெனரல் ஜேமி ஸ்பியசர்-பிளாஞ்சே, கனடாவின் முதல் F-35 விமானத்தில் பொருத்தப்படவுள்ள உடல் கட்டமைப்பு பகுதியின் மீது கையெழுத்திட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.