சென்னை:
சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான பெயர்களை நீக்கிய விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் விலக வேண்டும் என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் முடிவுகளில் சந்தேகம்:
“சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்குத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. இன்று ஆங்கில நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, SIR-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
ரகசியமாகச் செயல்பட்டது அம்பலம்:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, ரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.
அரசியல் குறுக்கீடு:
நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பதிவு அலுவலர்களால் (ERO) சேர்க்க முடியவில்லை. ERONet வலைத்தளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
பதவியில் நீடிக்கக் கூடாது:
ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தோம். இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்; SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்\” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#MKStalin #DMK #ElectionCommission #GyaneshKumar #VoterList #ERONet #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive