சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறையை ஆளுமையாகக் காட்டும் போக்குகளுக்கு எதிராக ஊடக ஒழுக்க கோவை (Media Code of Ethics) அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் வகையில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் விளம்பரங்கள் அதிகளவில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வசியம் செய்வது தொடர்பான விளம்பரங்கள் மட்டுமின்றி, அண்மைய காலங்களில் சமூக ஊடகங்களில் ஒரு துளி எண்ணெயைத் தடவிக்கொண்டால் இவ்வாறு மாறும் என்பது போன்ற, சமூகத்தையும் சிறுவர் தலைமுறையையும் தவறான நிலைமைகளுக்குத் தள்ளும் தரம் தாழ்ந்த விளம்பரங்கள் வெளியாகி வருவதாகவும் அவர் கூறினார்.
சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய அம்சங்களைக் கருத்தில் கொண்டே ஊடகங்களுக்கு ஒரு சமூக ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சமூக அமைப்பு முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகக் கூறினார்.
விளம்பரத்துறை, கலை, ஊடகம், இலக்கியம் என எந்தத் துறையாக இருந்தாலும், சமூகம் முன்னோக்கிச் செல்லும் இடத்தில் தாங்கள் உறுதியாக நிற்பதாகவும், புதிய ஒழுக்கக் கோவையில் இவை அனைத்தையும் உள்ளடக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்முறையையே ஆளுமை எனக் கருதும் மனநிலை சமூகம் முழுவதும் காணப்படுவதாகவும், ஆவேசமாகவோ வன்முறைத் தன்மையுடனோ பேசுவதை வீரமாகவோ ஆளுமையாகவோ சித்தரிக்கும் திரைக்கதைகள், கதைகள், நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் வன்முறைத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வன்முறையைக் கைவிடுவதே உண்மையான வீரம் மற்றும் ஆளுமை எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆண்மை மற்றும் பெண்மை குறித்த தவறான அல்லது இறுக்கமான கருத்துகள் சமூகத்தில் ஆழமாகப் பதிய வைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பிள்ளைகளைப் பாடசாலை, சமூகம், விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் சிறுவர் சங்கங்கள் ஊடாக விழிப்புணர்வுடன் செயல்பட வைக்க வேண்டும் என்றார்.
பாடசாலைக் கல்வி முறைக்குள் இது குறித்து விஞ்ஞானபூர்வமான புரிதலை வழங்குவதே பொருத்தமான முறையாக இருக்கும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்தார்.