கோணேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் இந்த காண்டாமணி விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டால் நிச்சயமாக ஜனாதிபதிக்கு பக்கபலமாக இந்து மக்கள் இருப்பார்கள்.
இந்து மக்களால் இலங்கை சிவ பூமி என்று போற்றப்படுகின்றது. அதை வேளை பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட பெருமைமிக்க புண்ணியமான சிவபூமி இலங்கை நாடாகும்.
கிழக்கு மாகாணத்தின் திருகோண மலையில் பஞ்ச ஈஸ்வர தலங்களில் ஒன்றான திரு கோணேஸ்வர ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது. தேவார பதிகம் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளின் பண உதவி மூலம் 1000 கிலோ கிராம் நிறையுடைய காண்டாமணி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனை ஆலயத்தில் அமைப்பதற்கான தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கேட்கப்பட்டபோது அவர்கள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனை ஆலய நிர்வாகத்தினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்களுக்கும் இது பற்றி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எந்தவிதமான தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து மதங்களும் சமமாக பேணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர்.
இந்த வகையில் தொல்லியல் திணைக்களத்துக்கு இது பற்றி அறிவுறுத்தல் கொடுத்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் அந்தக் கோணேஸ்வர மலையில் அமைந்திருக்கும் அந்த கோணேஸ்வர ஆலயத்தின் காண்டாமணி அமைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நல்ல நடவடிக்கையை எடுத்து இந்து மக்களுக்கு கௌரவம் அளிப்பதாக இச்செயற்பாடு அமையும் என்றார்.