ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மாத்திரம் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த அடிப்படையில் ஜனாதிபதியின் தற்போதைய இந்திய விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
எனினும், இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் வெறும் சம்பிரதாயபூர்வமான பேச்சுவார்த்தைகளுடன் மாத்திரம் சுருங்கிவிடக் கூடாது. இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதே இந்தியாவினதும், சர்வதேச சமூகத்தினதும் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போது நீண்டகாலமாகச் செயலிழந்து காணப்படும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி, நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய பாரிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உண்டு.
எனவே, இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அப்பால், உள்நாட்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆக்கபூர்வமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.