கிருஷாந்தி குமாரசுவாமியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 583 மனித எச்சங்களை நினைவுகூரும் வகையில், லண்டனில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் பிரிம்ரோஸ் ஹில் பூங்காவில் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், 583 வெள்ளைத் துணிகள் பயன்படுத்தப்பட்டு, அவற்றால் உடல்களை முழுமையாக மூடியவாறு பங்கேற்பாளர்கள் தரையில் படுத்திருந்தனர்.
1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி, செம்மணிச் சந்தியில் அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
அந்த சம்பவத்தின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழர் இளைஞர் அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளிட்ட பிரித்தானியாவில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை நினைவுகூரும் வகையில், 583 பேர் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடியபடி அமைதியாக படுத்திருந்த காட்சியானது, செம்மணி புதைகுழி தொடர்பான நினைவுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.