மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, சுகாதார அதிகாரிகளின் திடீர் சோதனையைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.
மன்னார் நகர சபை மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், குறித்த உணவகம் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.
கண்டறியப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள்:
உணவு தயாரிக்கும் இடத்தில் அதிக ஈக்கள் மொய்த்தமை.
கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கி நின்றமை.
கோழிகள், புறாக்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் கழிவுகளுக்கு மத்தியில் உணவு தயாரிக்கப்பட்டமை.
பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்த செயலைத் தொடர்ந்து, உடனடியாக உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உரிமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது. சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாக நிறைவேற்றி, முறையான அனுமதியைப் பெறும் வரை குறித்த நிலையத்தை மீண்டும் இயக்கக் கூடாது என அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.