நீர்கொழும்பு சிறைச்சாலையில் (Negombo Prison) ஏற்பட்ட வன்முறை மோதலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகலை சிறைச்சாலைக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகளின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 6ஆம் திகதி, சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் இறுதி மரக் கதவை உடைத்துக் கொண்டு தப்பியோட முயன்றதாகக் கூறப்படும் நிலையில், இந்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
விசாரணைகளின்படி, கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தான தாக்குதலை நடத்தியதாகவும், சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த அதிகாரி துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிகளுக்கு இணங்க நடத்தப்பட்டதா அல்லது அதிகார துஷ்பிரயோகம் ஏதும் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதிவான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.