தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் விக்ரம், ஊர்வசி, ரியா ஷிபு, எம்.எஸ். பாஸ்கர், வி டி வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் வழங்குகிறார்.
விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘இரு முகன்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் ஆனந்த் ஷங்கரும் நடிகர் சியான் விக்ரமும் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் இந்த புதிய திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. இதற்கான பாரம்பரிய பூஜை நிகழ்வு நடைபெற்றது. இதில் பட குழுவினர் பங்கு பற்றினர்.
இதனிடையே விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் ‘வீர தீர சூரன்’ படம் வெளியாகி ஓரளவு வசூலில் வெற்றி பெற்றது என்பதும் அவரது நடிப்பில் தயாராகி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்பதும், ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சியான் விக்ரம் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கு பற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.