மினுவாங்கொடை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளது.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் சேம்பரில் (Magistrate’s chambers) நடைபெற்ற இந்த விசேட விசாரணையின் போது, சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் இந்தச் சமர்ப்பிப்புகள் முன்வைக்கப்பட்டன.
சிஐடி பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் இந்த விடயம் பரிசீலிக்கப்பட்ட போது, அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் நீதவானின் சேம்பருக்குள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விசாரணையின் போது, நீதிமன்றப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை குறித்துப் புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
பாதுகாப்புக் கவலைகளைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளுடன் நேரடியாகத் தொடர்புடைய நபர்களுக்கு மாத்திரம் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்குமாறு சிஐடி கோரிக்கை விடுத்தது.
இக்கோரிக்கையை பரிசீலித்த நீதவான், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த ஒவ்வொரு கைதி குறித்தும் தனித்தனி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.