யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் கௌரவ பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அவர்கள் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் தற்கொலை செய்து உயிரிழந்த சிறுமி சமரழகியின் மரணத்திற்கு நீதி கோரி போராடி வரும் அவரது தந்தையை இன்று (14.10.2026) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்தித்தார்.
இதன்போத கிளிநொச்சி மாவட்டப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் நேரடியாகக் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் சிறுமி சமரழகியின் மரணம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள்
குறித்து கேட்டறிந்தார்.
அத்துடன் சிறுமியின் தந்தை எதிர்கொண்ட அநீதிகள் நீதி கோரி அவர் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் இந்த விவகாரத்தில் பொலிஸார் வழங்கிய ஆதரவு தொடர்பாகவும் விரிவாகக் கேட்டறிந்தார்.
சிறுமியின் மரணத்திற்கு நீதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் பொலிஸ் தரப்பினர் உரிய முறையில் செயற்படத் தவறியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் இது தொடர்பாக நேரடியாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் உடனடியாக மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அவரது தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்திருக்கக்கூடிய நபர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்து வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் மருங்கன் மோகன் அவர்களுக்கு நன்றிகள் தெரிக்கின்றோம்.
இச்சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் வே. சுஜீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்