அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: தீய சக்தி திமுகவை அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காக, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை கட்சியை கட்டி காத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரிய தலைவர்களுக்கு வாரிசு இல்லை. நாட்டு மக்களை தான் வாரிசாக பாரத்தார்கள். எண்ணற்ற திட்டங்களை கொண்டு வழங்கிய காரணத்தினால் தான், இன்றைக்கும் அதிமுகவை எவராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.
மின் கட்டணத்தைக் கேட்டால் ஷாக் அடிக்கிறது என்று கூறிய ஸ்டாலின், அதனை ஆண்டுக்கு 5% உயர்த்தினார். இப்போது, கரண்டு பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க தொடர்ந்து வலியுறுத்தினோம். இளைஞர்கள் ஆதரவை இழந்ததால், தேர்தலை மனதில் வைத்து இப்போது தான் அதற்கு ஒப்புதல் கொடுக்கிறார்.
மக்களின் செல்வாக்கு, இளைஞர்களின் செல்வாக்கை முதல்வர் ஸ்டாலின் இழந்துவிட்டார். தோல்வி பயம் வந்துவிட்டதால், அவசர அவசரமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கிறார். அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். தமிழக மக்கள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலுக்கு வேறு மாதிரியும் ஓட்டளிப்பார்கள் இவ்வாறு இபிஎஸ் பேசினார்.