எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் அவரது அண்மைக்கால செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குரியதாக மாறியுள்ளன என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் தொடர்பில் ஆற்றிய உரை, தற்போது மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவையாகப் பார்க்கப்படுகின்றது.
உலகில் போர் நிலவும் நாடுகள் கூட இக்கட்டான சூழல்களில் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. ஆனால், இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தேவையற்ற விடயங்களைப் பேசி வருகின்றார்.
சஜித் பிரேமதாசவின் பெயரைக் குறிப்பிட்டு, சிறிய குழந்தைகள் கூட கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றன.
அவரது இவ்வாறான செயற்பாடுகள் எதிர்க்கட்சியின் நற்பெயருக்கே பெரும் களங்கம் விளைவிப்பதாக, அந்த அணியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களே கவலை வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய பெறுமதியான நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கள் ஒரு நகைப்புக்குரிய விடயமாக மாறியுள்ளது கவலைக்குரியது. எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அணுகுமுறை குறித்து நாட்டு மக்களே வரும் காலங்களில் சரியான முடிவை எடுப்பார்கள் என்றார்.