முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ச தான் மீண்டும் இலங்கை திரும்பும்போது விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சிராந்தி ராஜபக்ச திங்கட்கிழமை இந்த முன்பிணை மனுவை தாக்கல் செய்துள்ளதுடன் ஒருவேளை தான் கைதுசெய்யப்பட்டால் தன்னை பிணை மனுவில் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
சிராந்தி ராஜபக்சவின் இந்த மனு மாளிகாகந்த நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டத்தரணி ஜெயபாலான் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எதிர்மனுதாரராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிகுற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவில் சிராந்தி ராஜபக்ச முன்னிலையாகவேண்டும் என அழைப்பாணை வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே சிராந்தி முன்பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த கடந்த 16ம் திகதி சிராந்தி ராஜபக்ச கொழும்பு விமானநிலையம் ஊடாக மருத்துசிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணமானார்.அவ்வேளை விமானநிலையத்தில் வைத்து அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகவேண்டும் என்ற அழைப்பாணை கையளிக்கப்பட்டது