சிறுவர்களைக் கவர்ந்திழுத்துக் கடத்தும் குற்றச்சாட்டின் கீழ் 69 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ள குவெல்ப் (Guelph) காவல்துறை, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்களை முன்வருமாறு கோரியுள்ளது.
பொதுக் கழிவறை ஒன்றின் சுவரில் எழுதப்பட்டிருந்த தொலைபேசி எண் ஒன்றின் மூலம் நபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது குறித்து இரண்டு குடியிருப்பாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் ஒரு சாட்சி, தான் ஒரு 12 வயது சிறுவன் என்று அந்த நபரிடம் கூறியுள்ளதுடன், பாலியல் செயல்பாட்டிற்கான சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் கைகாட்டி அடையாளங் காணப்பட்டுள்ளார்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, 15 வயது சிறுவனாகத் தன்னை மறைமுகமாக அடையாளப்படுத்திக் கொண்ட இரகசியப் போலீஸ் அதிகாரி (Undercover officer) ஒருவரும் அந்தச் சந்தேக நபருடன் தொடர்பு கொண்டு, உள்ளூர் பூங்கா ஒன்றில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
குவெல்ப் நகரைச் சேர்ந்த 69 வயதுடைய பால் பார்ன்ஸ் (Paul Barnes) என்பவர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, தொலைத்தொடர்பு வசதியைப் பயன்படுத்தி சிறுவருக்கு எதிரான பாலியல் குற்றத்தைச் செய்ய ஏற்பாடு செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிணை விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டதுடன், வரும் ஜூலை 14 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இதுவரை முன்வராத கூடுதல் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது சாட்சிகளோ இருக்கலாம் எனப் காவல்துறை நம்புகிறது. இது தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள், குவெல்ப் காவல் சேவையின் இணைய வழி சிறுவர் சுரண்டல் தடுப்புப் பிரிவின் (Internet Child Exploitation Unit) டிடெக்டிவ் கான்ஸ்டபிள் சாம் ஜான்ஸ்டனை (Sam Johnston) 519-824-1212 (ext. 7214) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளும் புகார்களும் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுவார்.