சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையிலும், டெங்கு நோய்ப்பரவலுக்கு ஏதுவாகவும் உரிய முறையின்றி குப்பைகளைக் கொட்டும் நபர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றைக் கெஸ்பேவ (Kesbewa) நகர சபை அண்மையில் ஆரம்பித்துள்ளது.
கெஸ்பேவ நகர சபையின் தலைவர் சாமர மத்தும கழுகேவின்ஆலோசனையின் பேரில், இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றமொன்றினால் முதன்முறையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக ‘4G’ கமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதுடன், கமராவில் பதிவாகும் காட்சிகளை நகர சபையின் பிரதான அலுவலகத்திலுள்ள கணினித் திரையின் ஊடாக நேரடியாகக் கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குப்பைகளைத் தகுந்த இடங்களில் மாத்திரம் கொட்டுமாறு கெஸ்பேவ நகர சபை, பொலிஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினர் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், சில நபர்களின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டே இவ்வாறான கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டதாக நகர சபை தலைவர் தெரிவித்தார்.