கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக, பொலிஸார் அதிரடிச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், சிறுவர்களை இலக்கு வைத்துத் தொடர்ச்சியாகச் சிகரெட் மற்றும் பீடி போன்ற புகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் உயர் அதிகாரியின் வழிகாட்டலில் விசேட நடவடிக்கை ஒன்றைப் பொலிஸார் முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிறுவன் ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி, புகைப் பொருட்களை வாங்குமாறு பொலிஸார் பணித்தனர். அதன்படி, குறித்த சிறுவன் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொடுத்துப் புகைப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட போது, அங்கு மறைந்திருந்த பொலிஸார் வர்த்தகர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதேபோன்று, நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட அதிரடிச் சோதனைகளின் போது, சிறுவர்களுக்குப் புகைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 13 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.
சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட குறித்த வர்த்தகர்கள் மற்றும் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக, கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் சிறுவர்களைப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.