யாழ். நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி கேசவன் சயந்தன் உட்பட்ட சாவகச்சேரி சட்டத்தரணிகள் குழுவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணம் செய்துள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று(24.04.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சமர்ப்பணம் தொடர்பான முடிவையும் கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்த தீர்மானத்தையும் அடுத்த வாரம் வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேற்படி, நாவற்குழி விகாரைப் பிக்குவுக்கு எதிரான வழக்கை ஒட்டி, நகர்த்தல் பத்திரம் ஒன்றை மன்றில் சமர்ப்பித்து, இந்த விடயத்தை சட்டத்தரணி கேசவன் சயந்தன் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நேற்று(24) மன்றில் முன்னிலையாகி விடயங்களைச் சமர்ப்பணம் செய்துள்ளார். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்த பெரும்பாலான சட்டத்தரணிகள் இந்த சமர்ப்பணத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயத்தில் சாவகச்சேரி நீதிமன்றம் மூலம் சதி செய்யப்பட்டு இருப்பதாகவும், தந்திரோபாயமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் பகிரங்கமாக கருத்து வெளியிட்டதன் மூலம் பலாங்கொடை கஸ்ஸப தேரர் இந்த நீதிமன்றை அதன் நடவடிக்கைகளை அவமதிப்பிற்கு உட்படுத்தி இருக்கின்றார்.
அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு தொடர்பில் பூர்வாங்க தகவல்களை தருவதற்காக தேசிய பத்திரிகை ஒன்றில் இது தொடர்பாக வெளிவந்த செய்தியை ஆதாரமாக முன்வைத்துள்ளோம்.
நீதிமன்ற பணியாளர்கள் என்ற முறையில் சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் இந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து நீதிமன்ற அவமதிப்பு விசாரணையைத் தொடங்கக் கோருகின்றோம். ‘இத்தகைய விடயத்தில் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றிருப்பதான தகவல் மன்றுக்குக் கிடைக்குமானால் நீதிமன்றமே தன் பாட்டில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கலாம்.
அதனால் நீதிமன்றப் பணியாளர்களாகிய நாங்கள் இந்த விடயத்தை மன்றின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.
இது வழமையான நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் அல்ல, அதையும் தாண்டியது. நீதிமன்றின் சட்ட ரீதியான செயற்பாட்டை வேறு உள்நோக்கோடு அர்த்தப்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி இது.
சம்பந்தப்பட்ட பிக்கு நாவற்குழி விகாரைக்கு மீண்டும் திரும்பி தமது சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் கூறியிருக்கின்றார்.
உண்மையில் சம்பந்தப்பட்ட நாவற்குழி பிக்கு சட்டபூர்வமற்ற வேலையைச் செய்த காரணத்தால் தான் நாவற்குழி விகாரைக்குச் செல்ல நீதிமன்றத்தால் அத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை மறைத்து, பலாங்கொடை கஸ்ஸப தேரர் நீதிமன்றை அவமதிப்புக்கு உட்படுத்தி இருக்கின்றார் என்றார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கை அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நீதிவான் எம்.ஐ.எவ்.றிஸ்மினா தெரிவித்துள்ளார்.