கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப் பதியச் செய்யும் முயற்சியின் தொடர்ச்சியாக சில பதவிகள் உருவாக்கப்பட்டும், சில பதவிகள் விரிவுபடுத்தப்பட்டும் உள்ளன.
கடந்த டிசம்பரில் கார்னி தனது துணை அமைச்சர்களை மாற்றியமைத்தபோது, இந்த மாற்றங்கள் கனடாவாசிகளுக்கு தெளிவான விடயங்களை வழங்கும் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
2025 ஜனவரியில் பொது துறையை விட்டு வெளியேறி பிளாக்ரொக் முதலீட்டு (BlackRock Investment Institute) நிறுவனத்தில் பொருளாதார நிபுணராக பணியாற்றிய க்ளென் பர்வ்ஸ் மீண்டும் அரசாங்க சேவைக்கு திரும்புகிறார். அவர் கார்னியின் சர்வதேச வர்த்தகத்துக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பர்வ்ஸ் 2021ஆம் ஆண்டில் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கனேடிய நிதித் துறையில் பொருளாதார வளர்ச்சிக்கான உதவி துணை அமைச்சராக பணியாற்றினார். அதற்கு முன்பு 2011 முதல் 2018 வரை அதே துறையில் நிதிக் கொள்கை பொது இயக்குநர் உட்பட பல மூத்த பதவிகளில் பணியாற்றியிருந்தார். அவரது நீண்டகால பொது சேவை அனுபவத்தில் கனடா செயலகத்தின் திறைசேரி வாரிய(Treasury Board of Canada Secretariat)இல் உதவி செயலாளராகவும், சர்வதேச நாணய நிதிய மூத்த ஆலோசகராகவும் பணியாற்றிய காலங்களும் அடங்குகின்றன.
வெளிநாட்டு விவகாரங்களுக்கான துணை அமைச்சரான டேவிட் மொறிரிசன் தற்போது கார்னியின் மூத்த தூதரக மற்றும் சர்வதேச விவகார ஆலோசகராக புதிய பொறுப்பை ஏற்கிறார்.