.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் நிலை நெருங்கியுள்ள போதிலும், பேச்சுவார்த்தைகளில் அனைத்து அதிகாரங்களும் (Cards) அமெரிக்காவின் பக்கமே இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், மெக்சிகோ மற்றும் கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்துக் குறிப்பிடுகையில்:
“மெக்சிகோவைப் போலவே கனடாவும் எம்முடன் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டாக வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்து வருகிறது. நாங்கள் மிகவும் நல்லதொரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டோம். ஆனால், இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன், இந்த விவகாரத்தில் அனைத்துச் சாதகமான அதிகாரங்களும் எங்களின் வசமே உள்ளன” என்று கூறினார்.
இதனிடையே, இஸ்தான்புல்லில் ஊடகவியலாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் மார்க் காரினி (Mark Carney), அமெரிக்க அரசுடன் கனடா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமரின் கூற்றுப்படி:
“இரு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், நேர்மையான முறையில் அமர்ந்து ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அமெரிக்கா தயாராக இருந்தால் இன்றிரவே கூட எம்மால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும். ஒருவேளை இதற்கு மேலும் பல மாதங்களோ அல்லது அடுத்த அரசு பதவியேற்கும் வரையிலோ காலம் எடுத்தாலும், முறையான ஒப்பந்தம் வரும் வரை காத்திருக்க நாங்கள் தயார்.”
அத்துடன், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அமெரிக்கா நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் கனடா தனது ஏனைய பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு இதில் கவனம் செலுத்தும் என்றும், ஆனால் அமெரிக்காவின் நகர்வுகளைக் கணிப்பது கடினம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பின்னணி மற்றும் வர்த்தக மோதல்:
கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கனடாவின் எஃகு (Steel) மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 25 சதவீத வரிகளை விதித்ததுடன், ஜூன் மாதத்தில் அவ்வரி விதிப்பை 50 சதவீதமாக உயர்த்தியது. இதற்குப் பதிலடியாக, எஃகு, பால் பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட 27.6 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது கனடாவும் பதிலடி வரிகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.