கனடாவின் யோர்க் பிராந்தியம் (York Region) மற்றும் பெருநகர டொராண்டோ பகுதிகளில் (GTA) நீண்டகாலமாகச் இடம்பெற்று வந்த கொகேன் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதத் துப்பாக்கிக் கடத்தல் வலையமைப்பைப் பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
யோர்க் பிராந்திய பொலிஸாரால் (York Regional Police) முன்னெடுக்கப்பட்ட ‘புரொஜெக்ட் பிளேட்’ (Project Blade) எனும் விசேட புலனாய்வு நடவடிக்கையின் மூலம் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீண்டகால விசாரணையும் பறிமுதலையும்: 2025ஆம் ஆண்டு யோர்க் பிராந்தியத்தில் கட்டுப்பாடான போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளைக் கடத்தும் தனிநபர் ஒருவர் குறித்துக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இப் புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட தீவிர கண்காணிப்புகளின் மூலம், இக் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களும் அடையாளங்காணப்பட்டனர்.
கடந்த ஜூலை 16ஆம் திகதி ஓரோரா (Aurora), வோன் (Vaughan) மற்றும் டொராண்டோ ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது பெருந்தொகையான போதைப்பொருட்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விபரங்கள்:
கொகேன் போதைப்பொருள்: $24,000க்கும் அதிக தெருப்பெறுமதி கொண்ட 28 அவுன்ஸ் கொகேன்.
சட்டவிரோத ஆயுதங்கள்: 4 உண்மையான கைத்துப்பாக்கிகள் மற்றும் 1 போலியான துப்பாக்கி (Replica firearm).
ரொக்கப் பணம் மற்றும் வாகனங்கள்: $66,000 ரொக்கப் பணம், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்: இக் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்பாக வோன் பகுதியைச் சேர்ந்த அந்தோனியோ அகஸ்டினோ (35), டொராண்டோவைச் சேர்ந்த பாலா மெலோ (55) மற்றும் ஓரோரா பகுதியைச் சேர்ந்த ஷஹ்ரியார் தலீரி (33), கர்மேலோ பாரிசி (30), டைலர் ஆக்னல் (29) உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் உட்பட கூட்டுப் பொறுப்பாக 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து நடத்தி வருவதால், இது குறித்த தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் யோர்க் பிராந்திய பொலிஸாரின் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவை (1-866-876-5423, Ext. 7817) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.