ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் பல பகுதிகளில் 10 முதல் 25 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதால், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
ஒட்டாவா-கட்டினோ (Ottawa-Gatineau) பிராந்தியத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதைத் தடுக்க மணல் மூட்டைகளைக் கொண்டு சுவர்களை எழுப்பி வருகின்றனர். இதற்காகப் பல இடங்களில் மணல் மூட்டைகளை நிரப்பும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஹாலிபர்டன் கவுண்டியில் உள்ள மிண்டன் ஹில்ஸ் (Minden Hills) பகுதியில் அவசர நிலை இன்னும் நீடிக்கிறது. அங்குள்ள கல் ஆறு (Gull River) குறுக்கேயுள்ள பாலங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
மணல் மூட்டைகளை நிரப்பும் பணிகளில் ‘குளோபல் மெடிக்’ (Global Medic) போன்ற பேரிடர் நிவாரண அமைப்புகள் மற்றும் ‘ஒன்ராறியோ கார்ப்ஸ்’ (Ontario Corps) தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவுட்டாவாய்ஸ் (Outaouais) மற்றும் டெஸ் ப்ரைரிஸ் (des Prairies) ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அவை வரும் நாட்களில் கரையை உடைக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிபிசிங் (Nipissing) ஏரிக்கரை பகுதிகளில் வெள்ளக் கண்காணிப்பு (Flood watch) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூ செயின்ட் மேரி (Sault Ste. Marie) முதல் பீட்டர்பரோ (Peterborough) வரையான பகுதிகளிலும் வெள்ள எச்சரிக்கை அமுலில் உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் பல எச்சரிக்கைகள் நீக்கப்பட்டாலும், கியூபெக் சிட்டி பகுதியில் இன்னும் மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை (Storm surge warning) அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.