சிறுவர்களில் முதலீடு செய்வது கனடாவின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்குச் சமமாகும் என்பதைக் கருத்திற் கொண்டு, நாட்டின் சிறுவர் நலப்படியை (Canada Child Benefit) அதிகரித்து வழங்குவதற்கு கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டொராண்டோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வின்ஸ் காஸ்பாரோ (Vince Gasparro) மற்றும் சி நுயேன் (Chi Nguyen) ஆகியோருடன் இணைந்து இடம்பெற்ற நிகழ்வொன்றில், குடும்பங்களுக்கான இந்த அதிகரித்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவது குறித்து உத்தியோகபூர்வமாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்படி, நடப்பாண்டில் ஆறு வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் குடும்பங்கள் $8,157 வரையிலும், ஆறு முதல் பதினேழு வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் $6,883 வரையிலும் பெறவுள்ளன. இது முறையே $160 மற்றும் $135 என்ற அளவிலான வருடாந்த உயர்வாகும்.
குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரச் செலவுகளைச் சமாளிக்க உதவுவதன் மூலம், மிகவும் வலுவான சமூகங்களைக் கட்டியெழுப்பவும், ஒவ்வொரு குழந்தைக்கும் மேலதிக வாய்ப்புகளை உருவாக்கவும், அத்துடன் G7 நாடுகளிலேயே மிகவும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கவும் முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.