பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவையின் தூதுக்குழுவினருக்கும் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நீலங்கரையில் இடம்பெற்றது.
இச் சந்திப்பு சனிக்கிழமை 04.07.2026 இரவு 8.00 மணியளவில் செந்தமிழன் சீமான் அவர்களது நீலாங்கரை இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது ஈழத் தமிழ் மக்களுக்காக அவர் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றமைக்கு நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்தும் அவர் உறுதியுடன் குரல்கொடுக்க வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டனர். மேலும் , ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தீர்வு காண இயலாது என்பதனால் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமை அடியோடு ஒழிக்கப்பட்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தமிழர்தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டி அரசியல் தீர்வு உருவாக்கப்பட தமிழ்நாட்டிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து இந்திய மத்திய அரசின் ஊடாக இலங்கை அரசின் மீது உரிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டுமெனக் கோரப்பட்டது.
மேலும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனஅழிப்புக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியமும் அதற்காக தமிழகத்துலுள்ள கட்சிகளை ஒன்றுணைத்துச் செயல்ப்பட வேண்டும் என்றும் கொரப்பட்டது. . அத்துடன், இந்திய மற்றும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கிடையே எல்லைத் தாண்டிய மீன்பிடி காரணமாக தொடர்ந்து உருவாகிவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை உள்ளிட்ட நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்கும், அவர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய அழைத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது. மேலும், தமிழர் தாயகத்தின் மக்கள் தொகைக் கட்டமைப்பை மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் மக்கள்தொகை மாற்ற முயற்சிகளைத் தடுக்க அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.