காலண்டர் படி இது வசந்த காலம் (Spring) என்றாலும், ஒட்டாவா இன்று ஒரு குளிர்காலக் காலைப் பொழுதையே எதிர்கொண்டது. நகர் முழுவதும் பரவலாகப் பெய்த பனிப்பொழிவு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவாவில் இன்று காலை முதல் மதியம் வரை சுமார் 2 முதல் 4 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என ‘என்விரான்மென்ட் கனடா’ (Environment Canada) தெரிவித்துள்ளது.
குயிண்டே வெஸ்ட் (Quinte West), பெல்லிவில் (Belleville), கிங்ஸ்டன் (Kingston) மற்றும் ஸ்மித்ஸ் ஃபால்ஸ் (Smiths Falls) போன்ற பகுதிகளில் 4 முதல் 8 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என்பதால், அங்கு விசேட வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வெப்பநிலை -8 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைந்திருந்தது. மதியத்திற்குப் பிறகு பனிப்பொழிவு படிப்படியாகக் குறைந்து வானம் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் பனிப்பொழிவு காரணமாகப் பார்வைத்திறன் (Visibility) குறையக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய பனிப்பொழிவு தற்காலிகமானது மட்டுமே. நாளை புதன்கிழமை முதல் வானம் தெளிவாகி சூரிய ஒளி நிலவும்.
புதன்கிழமை: 7 டிகிரி செல்சியஸ்.
வியாழக்கிழமை: 14 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்.
வார இறுதி: சனிக்கிழமை 12 டிகிரி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 14 டிகிரி செல்சியஸ் என வசந்த காலத்திற்குரிய இதமான காலநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று பெய்த திடீர் பனியால் நாடாளுமன்றக் குன்று (Parliament Hill) மற்றும் டவுன்டவுன் பகுதிகள் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.