பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை நோக்கி மிகக் கேவலமான முறையில் அசிங்கமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரையில் அவரை பாராளுமன்ற ஒழுக்காற்றுக் குழுவில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த மே 25ஆம் திகதி இந்த சபையில் எனது உரையின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றி முடித்துவிட்டு எனக்கு அருகில் அமர்ந்திருந்தவாறு மிகக் கேவலமான வார்த்தைகளால் என்னை நோக்கி மிக அசிங்கமாக வார்த்தைப் பிரயோகம் செய்திருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகங்கள் பாராளுமன்றத்திற்குள் இருக்கும் கெமரா காணொளிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
பல தடவைகள் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் அடியாட்களால் அச்சுறுத்தல்கள் என்னை ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்கக் கோவையின் பிரகாரம் பாராளுமன்ற சிறப்புரிமையை எழுப்பி பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும்,
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களை பெற்று தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் மற்றும் இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை குழுவில் இருப்பது அந்த குழுவை கேலிக் கூத்துக்கு உட்படுத்தும் என்பதனால் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணைகள் முடிவடையும் வரையில் அந்த குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இடை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.