உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் மூன்று வாரங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி, பாதுகாப்புப் படை செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரானும், வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான பதிலடி தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் ஆயுதங்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி வசதிகள் எவ்வளவு சேதமடைந்துள்ளன என்பது குறித்தும், தற்போது யார் ஈரான் அரசின் உச்ச பொறுப்பில் உள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் ஈரானிடம் இன்னும் எவ்வளவு ஆயுதங்கள், ஆற்றல் உள்ளது என்பதும் தெளிவாக தெரியவில்லை. எனவே, இந்தப் போர் எப்போது முடிவடையும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தச் சூழலில்தான் உலகெங்கிலும் உள்ள பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் இனி ஈரானின் எதிரிகளுக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று அந்நாட்டின் உயர்மட்ட இராணுவ செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி எச்சரித்துள்ளார். எனவே, மத்திய கிழக்குக்கு அப்பாலும் ஈரான் தனது தாக்குதல்களை இனி தீவிரப்படுத்தும் என்று கவலை எழுந்துள்ளது.