2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இன்று காலை நடைபெற்ற விசேட ஆராதனையில் உரையாற்றிய பேராயர், ஒருசில தரப்பினர் இந்த விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.
தாக்குதல் தொடர்பாகத் தங்களது கடமைகளைச் செய்யத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்ட போதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அதனைச் செயற்படுத்தத் தயக்கம் காட்டுவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.
தாக்குதல்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கர்தினால் மேலும் வலியுறுத்தினார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியைக் கண்டறிவது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதியை உறுதிப்படுத்துவதும், அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் ஆகும்,” என்று அவர் கூறினார்.
2024 அக்டோபரில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் வைத்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதியை அவர் நினைவு கூர்ந்தார். “உண்மை காலப்போக்கில் மறைந்துபோக அரசாங்கம் அனுமதிக்காது” என ஜனாதிபதி அன்று கூறியதை நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள யதார்த்தத்தைக் கண்டறிய உண்மையை அடிப்படையாகக் கொண்ட விரிவான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
உண்மை வெளிவரும் வரை நீதிக்கான தங்களது போராட்டம் ஓயாது என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.