அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், இந்த மாற்றம் “மிகவும் விரோதமான முறையில்” நிகழக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டிலிருந்து அகற்றி அமெரிக்காவிற்கு கொண்டு செல்வது உட்பட அனைத்து நிபந்தனைகளுக்கும் ஈரான் “ஒப்புக்கொண்டது” என்று அவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
“இல்லை, துருப்புக்கள் தேவையில்லை,” என்று CBS செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஈரானிலிருந்து யுரேனியத்தை அகற்ற அமெரிக்க வீரர்கள் தரையிறங்க வேண்டுமா என்ற கேள்விக்கு ட்ரம்ப் பதிலளித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் அவர்களுடன் சேர்ந்து அங்கு சென்று அதைப் பெற்றுக்கொள்வோம். அந்த நேரத்தில் எங்களிடம் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என்பதால் சண்டையிட வேண்டிய அவசியம் இருக்காது,” என்றார்.
பின்னர் அரிசோனாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ஈரானுடனான சாத்தியமான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை விளக்கும் போது அவர் இந்தக் கூற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
“அமெரிக்கா அனைத்து ‘அணுசக்தித் தூசியையும்’ (Nuclear Dust) பெற்றுக்கொள்ளும். அணுசக்தித் தூசி என்றால் என்ன தெரியுமா? அது எமது B2 குண்டுவீச்சு விமானங்களால் உருவாக்கப்பட்ட அந்த வெள்ளை நிறத் தூள் போன்ற பொருள்… நாங்கள் அதை எப்படியும் எடுக்கத்தான் போகிறோம். ஆனால் அந்த (இராணுவ) வழியில் எடுப்பது சற்று ஆபத்தானது,” என்று அவர் கூறினார்.
யுரேனியக் கையிருப்பை ட்ரம்ப் “அணுசக்தித் தூசி” என்று அழைத்தாலும், அணுசக்தித் துறையில் இது அறியப்பட்ட சொல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பின் இந்தக் கூற்றுகளை “மாற்று உண்மைகள்” (தவறான தகவல்கள்) என்று ஈரானின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சாடியுள்ளார். ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு அனுப்ப ஈரான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்று மறுத்த அவர், இந்த கோரிக்கையை ஒரு “தொடங்க முடியாத காரியம்” (non-starter) என்றும் அழைத்தார்.
மேலும், யுரேனியம் செறிவூட்டுவதை காலவரையின்றி நிறுத்த ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கத் தலைவர் கூறியதையும் அந்த அதிகாரி நிராகரித்தார். ஈரான் சர்வதேச சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு “விதிவிலக்கான நாடாக” இருப்பதை ஒருபோதும் ஏற்காது என்றும், செறிவூட்டல் தொடர்பான கேள்வியே இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மிக முக்கியமான முரண்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.