இன்று காலை இஸ்லாமாபாத்தில் சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தலைநகர் வழியாகப் பயணம் செய்யும் போது, பாதுகாப்புச் சாவடிகள் மற்றும் “இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்” (Islamabad Talks) என்ற சுவரொட்டிகள் வீதிகளில் வரிசையாகக் காணப்படுகின்றன. இருப்பினும், ஒரு பெரிய நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது.
ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான அமெரிக்கக் குழு பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யும் என்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது, ஆனால் அதற்கான நேரம் தெளிவாகத் தெரியவில்லை. அவர் இந்நேரம் வந்தடைந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும் அவர் திங்கட்கிழமை இரவு வாஷிங்டனில் தங்கியிருந்ததாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
இந்தத் தெளிவற்ற நிலைக்கு, பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது குறித்து ஈரான் பகிரங்கமாக உறுதியளிக்கத் தயங்குவதே காரணமாக இருக்கலாம். மாறாக, அவர்களது அறிக்கைகளில் இன்னும் கோபமும் ஆத்திரமுமே வெளிப்படுகின்றன.
ஈரானியக் குழுவை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) கூறுகையில், “அச்சுறுத்தல்களின் நிழலில்” பேச்சுவார்த்தைகளை ஈரான் ஏற்காது என்று தெரிவித்துள்ளார். மேலும், டொனால்ட் ட்ரம்ப் “முற்றுகையைத் தொடங்கியதோடு போர்நிறுத்தத்தையும் மீறிவிட்டார்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நடந்த நிகழ்வுகளை அவர் குறிப்பிடுகிறார். ஈரான் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதோடு, ஈரானின் துறைமுகங்களுக்கு அமெரிக்கா தனது சொந்த முற்றுகையை விதித்து ஈரானின் தடையை முறியடிக்க முயன்றது.
ஆனால் ஈரானுக்குள் மற்றொரு விடயமும் நடந்து கொண்டிருக்கிறது. மோதலை விடவும் இராஜதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும்படி காலிபாப் போன்ற பிரமுகர்களுக்கு அந்நாட்டின் தீவிரப் போக்காளர்கள் (Hardliners) அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்தத் தொடர்ச்சியான போரில் பல சிரேஷ்ட தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஈரானுக்குள் நிலவும் உள் அதிகாரப் போட்டியே திரைமறைவில் நடந்து கொண்டிருக்கிறது. பகிரங்கமாக நாம் கேட்கும் பல கருத்துக்கள் வெறும் அரசியல் சவடால்களாக இருக்கலாம், அதிகாரிகள் என்ன சொன்னாலும் ஈரான் உண்மையில் பயணத்திற்குத் தயாராகி வரவும் வாய்ப்புள்ளது.
ஆயினும், போர்நிறுத்தக் காலம் முடிவடைய இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் உண்மையில் நடக்குமா என்பது குறித்து எமக்குப் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.