வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளது என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பதிவிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாளை(30.01.2026) காலை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பின்னர் நாளை முற்பகல் அளவில் இது பரவலடைந்து ஊவா மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் விரிவடையும்.
நாளை மறுதினம் (31.01.2026) இது கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலடைந்து கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் (31.01.2026)வடக்கு மாகாணத்திற்கும் இம்மழை விரிவடையும். வடக்கு மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. கிளிநொச்சியின் சில பகுதிகள் மட்டும் மிதமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
வடக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது யாழ்ப்பாண மாவட்டம் மிகக் குறைந்த மழையை அல்லது மழையற்ற நிலையைக் கொண்டிருக்கும். எதிர்வரும் 31.01.2026 அன்று மத்திய மாகாணம், மேல் மாகாணம், வட மத்திய, வடமேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளும் பரவலாக மிதமான மழையைப் பெறும். இம் மாகாணங்களின் ஒரு சில பகுதிகள் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 01.02.2026 அன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் மிதமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஆகவே இந்த மழை நிலைமையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளத் திட்டமிட்டு மேற்கொள்வது அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்கும்.