வெளிநாட்டு செலாவணி சந்தையில் ஒரு வாரகாலமாக நீடித்த கடுமையான ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து, அமெரிக்க டாலர் விகிதம் திடீரென ஒரே இரவில் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கினார். இந்த நிலைத்தன்மைக்கு மத்திய வங்கியின் இலக்கு நிர்ணயித்த தலையீடுகளே (Targeted interventions) காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
கலாநிதி வீரசிங்கவின் கூற்றுப்படி, கடந்த வாரம் அவதானிக்கப்பட்ட செலாவணி விகித மாற்றங்கள் பொருளாதாரத்தின் அடிப்படை மாற்றங்களால் ஏற்பட்டவை அல்ல; மாறாக சந்தை ஊகங்கள் மற்றும் பீதியால் தூண்டப்பட்ட “அதிகப்படியான தேவையினால்” (Excessive demand) ஏற்பட்டவை ஆகும்.
வெளிநாட்டு செலாவணி சந்தையின் இரண்டு முக்கிய பிரிவுகளுக்கு இடையே வளர்ந்து வரும் இடைவெளியை ஆளுநர் சுட்டிக்காட்டினார்:
-
வங்கிகளுக்கு இடையிலான சந்தை (Interbank market): வங்கிகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்யும் இடம்.
-
சில்லறை சந்தை (Retail market): வங்கிகள் நுகர்வோர் மற்றும் வணிகங்களுடன் வர்த்தகம் செய்யும் இடம்.
“செலாவணி விகிதம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் சில ஊகங்கள் காரணமாக, இறக்குமதியாளர்கள் தங்களுக்குத் தேவையான டாலர்களை வங்கிகளிடமிருந்து அவர்கள் விரும்பும் எந்த விலையிலும் வாங்கத் தொடங்கினர்,” என்று கலாநிதி வீரசிங்க விளாக்கினார்.
முறையான வங்கிகளுக்கு இடையிலான சந்தை விகிதம் சுமார் 330 ரூபாயாக இருந்தபோது, பீதியடைந்த இறக்குமதியாளர்கள் தங்களின் வரவிருக்கும் இறக்குமதிச் செலவுகளை ஈடுகட்ட 345, 350 மற்றும் 355 ரூபாய் போன்ற மிக உயர்ந்த சில்லறை விகிதங்களில் டாலர்களைக் கோரத் தொடங்கினர். இந்த ஊக வணிகம் (Speculative behaviour) சில்லறை விற்பனை விகிதத்தை வங்கிகளுக்கு இடையிலான அடிப்படை விகிதத்திலிருந்து கடுமையாக திசைதிருப்பியதுடன், சந்தை நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது.
“வங்கிகளுக்கு இடையிலான சந்தை விகிதமும் வணிக ரீதியான விகிதமும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அவை விலகிச் சென்றன. இந்தச் சூழ்நிலையில், நாங்கள் தலையிட முடிவு செய்தோம்,” என்று அவர் விளக்கினார்.
இத்தகைய ஒழுங்குமுறை தலையீடுகள் மற்றும் திறைசேரியுடன் (Treasury) இணைந்து நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து, வர்த்தக நிலைமைகள் தற்போது சீராகியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.![]()